ஒரு காட்டில் உள்ள குடிசையில் ஒரு ஆடு தன் குட்டிகளுடன் வசித்து வந்தது.
அது தன் குட்டிகளை அன்போடு பார்த்துக் கொண்டது. ஒருநாள் குட்டிகளுக்காக உணவு தேடி வெளியே செல்ல தயாரானது.
உடனே தன் குட்டிகளை அழைத்தது “செல்லங்களா நான் உணவு கொண்டு வர காட்டுக்குச் செல்கிறேன், அனைவரும் வீட்டிற்குள் பத்திரமாக இருங்கள், என்னை தவிர யார் கதவை தட்டினாலும் திறக்காதீர்கள். உங்கள் அனைவரையும் சாப்பிடுவதற்காக ஒரு ஓநாய் திரிந்து வருகிறது ஜாக்கிரதையாக இருங்கள்” என்று சொல்லி வெளியே சென்றது.
தாய் ஆடு வெளியே சென்றதை பார்த்த ஓநாய் எப்படியாவது அதன் குட்டிகளையும் தின்று விட வேண்டும் என்று எண்ணியது.
உடனே அது ஆட்டின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி “செல்லங்களை கதவைத் திறங்க நான் உங்க அம்மா வந்து இருக்கேன். நீங்க சாப்பிடறதுக்கு உணவு கொண்டு வந்திருக்கேன் சீக்கிரம் கதவைத் திறங்க” என்று கூறியது
ஓநாயின் குரல் தங்களது தாயின் குரல் போல் இல்லை என்பதை அறிந்த புத்திசாலி ஆட்டுக்குட்டிகள் “ஏய் பொல்லாத ஓநாயை எங்களை முட்டாள் என்று நினைத்தாயா என் தாயின் குரல் எங்களுக்கு தெரியாதா மரியாதையாக இங்கிருந்து சென்றுவிடு” என்று கூறியது.
பின்னர் ஓநாய் அங்கிருந்து சென்று தாய் ஆடு போல் பேசும் பயிற்சியில் ஈடுபட்டு மீண்டும் திரும்பி வந்து “செல்லங்களா கதவ திறங்க நான்தான் அம்மா வந்து இருக்கேன் சீக்கிரம் கதவைத் திறங்க” என்று தாய் ஆடு போல் பேசியது.
ஆனால் அந்த ஆட்டுக்குட்டிகள் புத்திசாலிகளாக இருந்தனர். அவை எச்சரிக்கையுடன் கதவின் கீழ் இருந்த மாயக்கண்ணாடிவழியாக பார்த்தன.
ஓநாயின் கால்களைப் பார்த்து விட்டு “இல்லை இல்லை நாங்க கதவை திறக்க மாட்டோம் உன்னை அடையாளம் கண்டு கொண்டோம் எங்க அம்மாவோட கால் வெள்ளை வெளேர் என்று இருக்கும் ஆனா உன்னோட கால் ரொம்ப வித்தியாசமா இருக்கு அதனால் இங்கிருந்து போய்விடு” என்றது ஆட்டுக்குட்டிகள்.
ஆட்டுக்குட்டிகளின் பேச்சை கேட்ட ஓநாய் ஒரு வெள்ளை நிறச் சாயத்தை தன் கால்களில் ஊற்றி கொண்டது. பின்பு அதன் கால்கள் வெள்ளையாக காட்சியளித்தன.
மீண்டும் ஆட்டின் குடிசைக்கு திரும்ப வந்து கதவை தட்டி “என் செல்லங்களா கதவைத் திறங்க நான் திரும்ப வந்துட்டேன் சீக்கிரமா கதவை திறங்க பா” என்று தாய் ஆடு போல் பேசியது.
குட்டிகள் மாயக்கண்ணாடி மூலம் பார்க்க கால்களில் வெள்ளை நிறம் தென்பட்டது.
உடனே அம்மா என்று நினைத்து கதவை திறந்து விட்டது.
திடீரென்று ஓநாயை உள்ளே வருவதைப் பார்த்த குட்டிகள் ஒவ்வொன்றும் ஓர் இடத்தில் ஒளிந்து கொண்டன.
உள்ளே வந்த ஓநாய் கடிகாரம் பின்பு ஒளிந்திருந்த ஒரு குட்டியை தவிர மற்ற அனைத்து குட்டிகளையும் கண்டு பிடித்து தின்று விட்டு சென்றது.
ஒரு குட்டி கடிகாரத்தின் பின் ஒளிந்திருக்கும் என்பதை ஓநாய் யோசிக்கவே இல்லை.
சில நேரம் கழித்து ஆடு வீட்டிற்கு திரும்பிய போது வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தது.
உடனே வீட்டிற்கு வந்து தன் குட்டிகளை தேடியது.
குட்டிகள் ஒன்றும் தென்படவில்லை. “என் செல்லங்களா எங்க போனீங்க கதவை எத்தன வாட்டி திறக்காதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா” என்று கதறியது.
திடீரென்று ஒரு குரல் “அம்மா என்ன காப்பாத்துங்க நான் இங்கேதான் கடிகாரத்துக்கு பின்னாடி இருக்கேன் என்ன காப்பாத்துங்க”.
ஆடு உடனே பாய்ந்து போய் அந்த குட்டியை எடுத்து முத்தமிட்டது.
குட்டி நடந்த முழு சம்பவத்தையும் கூறியது.
அப்பொழுது ஓநாயின் குரட்டை சத்தம் கேட்டதை உணர்ந்து ஆடு “அந்த ஓநாய் இங்கேதான் இன்னும் இருக்குன்னு நினைக்கிறேன் நீ போய் அந்தக் கத்திரிக்கோலை எடுத்துக் கொண்டு வா” என்றது.
அந்த ஆட்டுக்குட்டி உடனே போய் ஒரு கத்தரிக்கோலை கொண்டு வந்தது.
உடனே அவர்கள் இருவரும் தோட்டத்துக்கு சென்றனர் அங்கு அந்த ஓநாய் தூங்கிக் கொண்டிருந்தது.
ஆடு தூங்கிக் கொண்டிருந்த ஓநாயின் அருகே மெதுவாகச் சென்று அதன் வயிற்றை வெட்டியது.
அதன் வயிற்றுக்குள் அனைத்து குட்டிகளும் உயிருடன் இருப்பதை கண்ட ஆடு ஒன்றன் பின் ஒன்றாக வெளியே எடுத்தது.
குட்டிகளை கட்டி அணைத்து முத்தமிட்ட தாய் ஆடு அவர்களிடம் ஒவ்வொருவரும் ஒரு கல்லைக் கொண்டு வருமாறு சொன்னது.
குட்டிகள் ஒவ்வொன்றும் ஒரு கல்லைக் கொண்டு வர அதை ஓநாயின் கிழித்த வயிற்றுக்குள் வைத்து தைத்தது விட்டு தன் அனைத்து குழந்தைகளுடன் வீட்டிற்குள் சென்றது.
சிறிது நேரம் கழித்து ஓநாய்க்கு தாகம் எடுத்தது.
ஓநாய் எழுந்து தண்ணீர் குடிப்பதற்காக அருகே இருந்த கிணற்றை நோக்கி சென்றது.
வயிற்றிலுள்ள கற்களின் எடை காரணமாக தன் நிலை தடுமாறிய ஓநாய் கிணற்றுக்குள் விழுந்து இறந்தது.
இதைப் பார்த்த அனைத்து ஆடுகளும் சந்தோஷத்தின் குறித்து ஆடின.